என் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் சீரிய தமிழ்ப் பூ !

செவ்வாய், 29 ஜூன், 2021

தென்னாப்பிரிக்க மண்ணில் விளைந்த முத்து - தில்லையாடி வள்ளியம்மை !


------------------------------------------------------------------------------------------

22-02-1898 முதல் 22-021914 வரை தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி தில்லையாடி வள்ளியம்மை.

 

 

இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.

 

 

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்.

 

 

நெசவுத் தொழிலாளியான முனுசாமி பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்

 

 

கிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது.

 

 

அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

 

 

மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லையாடி வள்ளியம்மை.

 

 

அதற்காக 1913ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார்.

 

 

பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை.

 

 

பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை

த. அழகேசன்

தமிழ்ப் பணிமன்ற உறுப்பினர்

[தி.ஆ 2052, ஆடவை (ஆனி) 15 ]

(22-02-2019)

----------------------------------------------------------------------------------------

  

நலமான வாழ்வுக்கேற்ற நல்ல உணவு முறை !

----------------------------------------------------------------------------------------

தமிழர்கள் மத்தியில் உண்ணும் உணவு முறையில் ஒரு நம்பிக்கை பழங்காலமாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் வளரும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் பெருகும், மேற்கு நோக்கிச் சாப்பிட்டால் செல்வம் வளரும், வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது. என்பதே அந்த நம்பிக்கையாகும்.

 

நம் உணவு முறையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்பதே போதுமானது. எனினும் பழக்கத்தை மாற்ற இயலாதவர்கள் மூன்று முறை உண்ணலாம். சாப்பிட்ட சாப்பாடு வெளிவரும் வண்ணம் வயிறு முட்டச் சாப்பிடக்கூடாது. வயிற்றில் பாதியளவு உணவு, கால்பகுதி தண்ணீர், அடுத்த கால்பகுதி காற்றின் வருகைக்கு ஏற்றபடி வயிற்றில் இடம்விட்டுச் சாப்பிடுவதே மிதஉணவுப் பழக்கமாகும்.

 

அதிக அளவிற்கு உண்டால் நோய் வரும். ஆயுள் குறையும். எனவே எப்போதும் வயிறு புடைக்க, மூச்சு முட்ட உண்ணக்கூடாது. அளவிற்குக் குறைவாக உண்டாலும் உடலில் சக்தி குறையும். எனவே தேவையான அளவு அதாவது அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் உண்ண வேண்டும். நமக்குப் பசியே இல்லாத பொழுது கடனே என்று, மேலும் மேலும் உண்ணக்கூடாது. பசித்தே புசிக்க வேண்டும். பகலில் உணவு சிறப்பான விருந்தென்றால் இரவில் எதுவும் உண்ணக்கூடாது. மன உழைப்பு அதிகம் உள்ளவர்கள் அரிசி உணவு குறைவாகவும், கோதுமை, பால், வெண்ணெய், தேன், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, தக்காளிச்சாறு, ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, பசலைக்கீரை, புடலங்காய், பாகற்காய், ஆகிய ஊட்டச்சத்துக்களையும், புதிய காய்கறிகளையும் நிறைய உண்ண வேண்டும்.

 

உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, உணவு அதிகம் தேவை. இவர்கள் அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

உடல் உழைப்பின்றி நாற்காலியில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும். அதனால் நாள் முழுதும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் எளிதில் செரிக்கக் கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒரு கப் அளவான சாதம் எடுத்துக் கொண்டு அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு கால் வயிற்றுக்கு நீர் குடித்தாலே சரியானது. இது மேலும் இவர்கள் கொழுப்பு சார்ந்த எண்ணெய் பொருட்கள், பால், தயிர், வெண்ணெய், நெய், தேங்காய் போன்றவற்றில் தயாரான உணவுப் பொருட்களைக் குறைத்தால் வீணாக உடலில் கூடும் கொழுப்புகளைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

 

மூன்று வேளையும் அதிக உணவுகளை உண்பவர்கள் தம் உடலில் தேவை இல்லாத நோய் வளரத் தானே காரணமாக அமைந்துவிடுகின்றனர். இவ்வாறு அதிகம் உண்பதால் இரைப்பையின் உறுதித்தன்மை குறைந்து தொப்பை உண்டாகிறது. வயது முதிர்ந்த பொழுது, பாதியளவே உண்பவர்கள் நீண்டகாலம் வாழ்கின்றனர்.


இதில் சர்க்கரை வியாதி உடையவர்கள் வயிறு புடைக்க உண்ணாமல் மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளைகளில் உண்ணலாம்.

 

எதைச் சாப்பிட்டு எதைத் தவிர்க்க வேண்டும்?

 

(01). தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

 

(02). .வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

 

(03). .பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

 

(04). வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

 

(05). மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் வெண் மேகம்போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

 

(06). உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

 

(07). உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

 

(08).ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

 

(09). மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

 

(10).  நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

 

(11). காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

 

(12). அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

 

(13). பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

 

 (14)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

 

(15). கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

 

(16). மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

 

அசைவம் உண்போர் கவனத்திற்கு

 

அசைவம் பல வழிகளில் மனிதனுக்குக் கெடுதல் செய்கிறது. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி, எல்லா உயிருந்தொழும்என்கிறார் வள்ளுவர்.

 

(01). அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் இவ்வுணவு நமக்குச் செரிப்பதற்கு, நம் குடலானது இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும்.

 

(02). அசைவ உணவு நம் குடலில் செரிமானமாகாத பட்சத்தில் இவ்வுணவு புளித்துப் பல கிருமிகளை உண்டாக்கும். அதனால் உடலுக்குக் கெடுதியாகும். இவை மேலும் பல நோய்களை உண்டாக்கும். ஆனால் மனிதக்குடல் நீளமாய் இருப்பதால் கழிவுப் பொருட்கள் எளிதில் வெளியாகாமல் நீண்ட நேரம் குடலில் தங்கி நச்சுக் கிருமிகளைத் தோற்றுவிக்கிறது. இவை ரத்தத்தில் கலந்து பல நோய்களைத் தோற்றுவிக்கிறது.

 

(03). அசைவ உணவில் கொடிய புளிப்பு நஞ்சு கலந்துள்ளது. இதனால் மார்பு வலி, வயிற்று வலி, நீரிழிவு ஆகியவை உண்டாகின்றன.

 

(04). சில நேரங்களில் இறந்த விலங்கின் கறியை உண்ணுவதால் விசக்கிருமிகள் தொற்றும் வாய்ப்பும் உள்ளது.

 

(05). இரண்டு, மூன்று நாட்கள் கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதாலும், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் சேர வாய்ப்புள்ளது.

 

(06). அசைவ உணவு உண்பதால் இயற்கையான மன உணர்வுகள் மாறுகின்றன. குறிப்பாக நல்ல உணர்வுகள் குறையத் தொடங்கும்.


உணவே மருந்து ! மருந்தே உணவு !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,


த.அழகேசன்,

தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர்,

[தி.ஆ; 2052, ஆடவை (ஆனி) 15]

{15-06-2021}

-----------------------------------------------------------------------------------------

பொய்க்கால் குதிரை - அழிவின் விளிம்பில் ஒரு ஆடற்கலை !

 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

பாரம்பரிய கலையான பொய்க்கால் குதிரையை அவரது கணவருடன் சேர்ந்து தனது 67 வயதிலும் ஆடிக் கொண்டிருக்கிறார் காமாட்சி. அவரது கணவர், கலைமாமணி நாடி ராவுக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரும் இன்னும் இந்தக் கலையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் !

 

 

கலைத்துறையில் இருக்கும் இந்த தம்பதிகளையும் சந்தித்து பேசினோம். நாம் அவர்களை சந்திக்க சென்ற போது, நாடிராவ் - காமாட்சி தம்பதியினர் குதிரையாட்டத்திற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள்.


நடனத்திற்கு ஒப்பனை செய்து கொள்ளும் காமாட்சி ஒரு புறம் மறுபக்கத்தில் குதிரைகளுக்கும் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். குதிரைகளுக்கு என தனியே ஆடை, கிரீடம் என்று ஒவ்வொன்றாக பொருத்தப்பட்டது !

 

 

மராத்திய மாநிலத்தை பின்புலமாகக் கொண்ட நாடி ராவ் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக தமிழகத்தில் பொய்க்கால் குதிரை நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் தஞ்சாவூரின் சரபோஜி மன்னர் தங்களுக்கு மிகுந்த ஆதரவளித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

 

 

133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை. நாட்டுப்புறக் கலைகளிலேயே மிகவும் முக்கியமான ஒன்று பொய்க்கால் குதிரையாட்டம் என்கிறார் நாடிராவ். காலில் கட்டைக்கட்டி, குதிரையின் கனத்தையும் தூக்கி, காலில் கனமான சலங்கையும் கட்டி ஆடுவது எளிதானதல்ல. இதுமாதிரி மற்ற ஆட்டங்களில் கிடையாது என்கிறார் அவர்.

 

 

"பொய்க்கால் குதிரை என்ற கலையானது குறைந்தது 200 ஆண்டுகள் பழமையானது. இதன் பூர்வீகம் மகாராஷ்டிரா. அதன்பிறகு தமிழகத்திற்கு வந்தது. என் அப்பா, தாத்தா, மாமா ஆகியோர் இந்த கலை நிகழ்ச்சிகளை இங்கு நடத்தி வந்தார்கள்" என்கிறார் நாடிராவ்.

 

 

தற்போது பெரும்பாலானோர் சினிமாதான் பார்க்கிறார்களே தவிர, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு யாரும் வருவதில்லை.


மேலும் அவர் கூறுகையில், "ஒரு காலத்தில் ஊர் திருவிழா மற்றும் அரசு விழாக்கள் என அடிக்கடி இந்த பொய்க்கால் குதிரை நடனம் ஆடப்படும். ஆனால், இத்தலைமுறை இளைஞர்கள் இதனை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல புகழும், பெயரும், பெருமையும் இருந்தது. ஆனால், போகப் போக அதெல்லாம் குறைந்து போய்விட்டது.

 

 

நான் சுமார் 40 ஆண்டுகளாக இத்தொழிலில் இருக்கிறேன். நாளாக ஆக, இது மேலும் மழுங்கிக் கொண்டே வருகிறதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை" என்று கூறுகிறார்.

 

 

தன் மாமனாரிடம் இருந்து இக்கலையை கற்றுக் கொண்டதாக கூறும் காமாட்சி உள்ளூர், மற்றும் வெளியூர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

 

 

பெண்களால் சொல்ல முடியாத, சொல்லப்படாத விடயங்களின் கலை வடிவம் "முதலில் கரகம், குத்தி ஆடிக் கொண்டிருந்தேன். தற்போது குதிரை ஆடுகிறேன். அந்தக்காலத்தில் எல்லாம் மார்வாரி குடும்பத் திருமண நிகழ்ச்சிகள், கலெக்டர் வருகை போன்ற பல்வேறு நிகழ்வுகளில் ஆடிக் கொண்டிருந்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது"

 

 

40 ஆண்டுகளாக, அதாவது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதிலிருந்து நான் ஆடுகிறேன். இப்போதெல்லாம் வயதான பெண் கலைஞர்களை எல்லாம் யாரும் அழைப்பதில்லை. இளம் பெண்களைதான் விரும்புகிறார்கள். இப்பவும் நான் கரகம் ஆடுவேன், ஆனால், என்னை யார் விரும்புவார்கள்?" என்கிறார் காமாட்சி. அதுவும் தற்போது பெரும்பாலானோர் சினிமாதான் பார்க்கிறார்களே தவிர, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு யாரும் வருவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

 

 

"தமிழக அரசும் மத்திய அரசும் இக்கலைக்கு ஊக்கமளித்து, எங்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அதுமட்டும் பத்தாது. எங்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்பட வேண்டும். எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், எங்களை அதற்கெல்லாம் பயன்படுத்துவதில்லை. வரப்போகும் புதிய பிரதமருக்கு எங்கள் கோரிக்கை இதுதான்" என்கின்றனர் இக்கலை தம்பதியினர்.

 

 

ஏதேதோ நடனத்துக்கெல்லாம் முக்கியத்துவம் தருகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. ஆனால், இந்த புராதாணக் கலையை செய்யும் நாங்கள் அழிந்து போய்விட்டால், இதனை நாளைக்கு எடுத்து செய்ய ஆளில்லை. அரசாங்கம் இந்த கலைக்கு முக்கியத்துவம் அளித்து வாய்ப்புத் தந்தால் இது வளரும் வாய்ப்பிருக்கிறது" என்று நாடிராவ் கூறுகிறார்.

 


ராஜா ரவி வர்மாவின் லஷ்மி ஓவியத்தில் உள்ள முகம் யாருடையது? ராஜா, ராணிகளை பார்த்திருக்கிறீர்களா?

 

 

"நாம் யாராவது ராஜாக்களையோ ராணிகளையோ நேரில் பார்த்திருக்கிறோமா? யாரும் பார்த்ததில்லை. நாங்கள் கோவில் திருவிழாக்களிலும், பல்வேறு இடங்களிலும் ஆடும்போதுதான், ஓ! ராஜானா இப்படிதான் இருப்பாரோ, ராணினா இப்படித்தான் இருப்பாரோ என்று பாமர மக்களுக்கு, அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

 

 

இந்தக்கலைக்கு நல்ல வரவேற்பு முன்பு இருந்தது.  ஆனால், இப்போது போதுமான வரவேற்பு இல்லை என்கிறார் நாடிராவ். இதனால், போதுமான வாய்ப்புகளும், வருமானங்களும் இல்லை என்கின்றனர் நாடிராவ் - காமாட்சி தம்பதியினர்.


 

இத்தம்பதியின் மகனான சிவாஜி ராவும் இதே தொழிலில்தான் இருக்கிறார். இவர்கள் வரப்போகவுள்ள புதிய அரசுக்கு வைக்கும் மற்றுமொரு கோரிக்கை, "60 வயதுக்கு மேலானவர்களுக்குதான் உதவித் தொகை கிடைக்கிறது. ஆனால், பெண் கலைஞர்கள் 60 வயது வரை இதில் தொடர்வதில்லை. தொடர முடிவதில்லை. எனவே அவர்களுக்கான உதவித் தொகையை 40 அல்லது 45 வயதில் இருந்து கொடுக்க வேண்டும்" என்று கூறுகின்றனர்.

 


இரண்டாவதாக, இக்கலையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களது மற்றொரு ஒரு முக்கியக் கோரிக்கை.

 

 

அதற்காக இக்கலையை பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாக சேர்த்து, விருது பெற்ற கலைஞர்களை வைத்து கற்றுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

 

 

எதிர்காலத்தில் இப்படி ஒரு கலை இருந்ததாக ஏதோ தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளாமல், இவற்றை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் சிவாஜி ராவ்.

 

 

வெளிநாடுகளில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மராத்திய மாநிலத்தை பின்புலமாகக் கொண்ட நாடிராவ் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக தமிழகத்தில் பொய்க்கால் குதிரை நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

"வெளிநாடுகளில் பொய்க்கால் குதிரை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தியராக பிறந்து இக்கலையை செய்வதை நினைத்துப் பெருமைபடுகிறோம். ஆனால், இங்கு கிராமப்புறங்களில் இந்தக்கலையை செய்யும்போது, ஏன் இந்தத் தொழிலை கற்றுக் கொண்டோம் என்று மனது நினைக்கிறது. இதற்கு காரணம் நம் நாகரீகம் மாறிக் கொண்டு வருகிறது என்பதுதான்" என்று சிவாஜி ராவ் தெரிவித்தார்.

 

 

"ஆனால், கிராமங்கள் இருக்கும் வரை இந்தக்கலை அழியாது, அழிய விடமாட்டோம்" என்கிறார் அவர்.

 

 

நன்றி BBC தமிழ் பிரிவு.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 


ஆக்கம் & இடுகை

த. அழகேசன்,

தமிழ்ப் பணிமன்ற உறுப்பினர்,

தி.ஆ 2050- 07- விடை-

(21-05-2019)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 


 

திங்கள், 28 ஜூன், 2021

தாய்ப்பாலில் எரிந்த தஞ்சைப் பெரிய கோயில் விளக்கு !

-----------------------------------------------------------------------------------------

சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர் !

 

மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.


சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன் !

 

அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்என்றார் !

 

திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார் !

 

அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர் களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார் !

 

மிகச்சரியானது மன்னாஎன்று வணங்கினார் !

 

அரசன் ஆணை பிறப்பித்தான். சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலை யிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான் !


ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார் !

 

எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரியவேண்டிய விளக்கு கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார் !

 

எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்குஎன்றான் !

 

காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வாஎன்று குரல் கொடுத்தார் !

 

உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது !


சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள் !

 

எழுந்திரு பெண்ணே! நீ யார்?’

 

நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி


உன் கணவன் எங்கே?’


என் புரு‌ஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’ !

 

அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள் !

 

உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.

 

அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னாஎன்று கண்கலங்கினாள் !

 

பெண்ணே ! அஞ்சாதே உண்மையைச் சொல்’ !

 

சொல்கிறேன் மன்னா! புரு‌ஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க அதனால என் தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசாஎன்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள் !

 

நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது !


தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன் அரண்மனை சிற்பியை அழைத்து தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்என்றான் !

 

 வரலாறு மறக்கடிக்க பட கூடாது !

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

 

ஆக்கம் & இடுகை


த. அழகேசன்

தமிழ்ப் பணிமன்ற உறுப்பினர்

தி.ஆ 2050-06- ஆடவை.

(21-06-2019)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -