என் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் சீரிய தமிழ்ப் பூ !

செவ்வாய், 29 ஜூன், 2021

பொய்க்கால் குதிரை - அழிவின் விளிம்பில் ஒரு ஆடற்கலை !

 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

பாரம்பரிய கலையான பொய்க்கால் குதிரையை அவரது கணவருடன் சேர்ந்து தனது 67 வயதிலும் ஆடிக் கொண்டிருக்கிறார் காமாட்சி. அவரது கணவர், கலைமாமணி நாடி ராவுக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரும் இன்னும் இந்தக் கலையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் !

 

 

கலைத்துறையில் இருக்கும் இந்த தம்பதிகளையும் சந்தித்து பேசினோம். நாம் அவர்களை சந்திக்க சென்ற போது, நாடிராவ் - காமாட்சி தம்பதியினர் குதிரையாட்டத்திற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள்.


நடனத்திற்கு ஒப்பனை செய்து கொள்ளும் காமாட்சி ஒரு புறம் மறுபக்கத்தில் குதிரைகளுக்கும் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். குதிரைகளுக்கு என தனியே ஆடை, கிரீடம் என்று ஒவ்வொன்றாக பொருத்தப்பட்டது !

 

 

மராத்திய மாநிலத்தை பின்புலமாகக் கொண்ட நாடி ராவ் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக தமிழகத்தில் பொய்க்கால் குதிரை நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் தஞ்சாவூரின் சரபோஜி மன்னர் தங்களுக்கு மிகுந்த ஆதரவளித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

 

 

133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை. நாட்டுப்புறக் கலைகளிலேயே மிகவும் முக்கியமான ஒன்று பொய்க்கால் குதிரையாட்டம் என்கிறார் நாடிராவ். காலில் கட்டைக்கட்டி, குதிரையின் கனத்தையும் தூக்கி, காலில் கனமான சலங்கையும் கட்டி ஆடுவது எளிதானதல்ல. இதுமாதிரி மற்ற ஆட்டங்களில் கிடையாது என்கிறார் அவர்.

 

 

"பொய்க்கால் குதிரை என்ற கலையானது குறைந்தது 200 ஆண்டுகள் பழமையானது. இதன் பூர்வீகம் மகாராஷ்டிரா. அதன்பிறகு தமிழகத்திற்கு வந்தது. என் அப்பா, தாத்தா, மாமா ஆகியோர் இந்த கலை நிகழ்ச்சிகளை இங்கு நடத்தி வந்தார்கள்" என்கிறார் நாடிராவ்.

 

 

தற்போது பெரும்பாலானோர் சினிமாதான் பார்க்கிறார்களே தவிர, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு யாரும் வருவதில்லை.


மேலும் அவர் கூறுகையில், "ஒரு காலத்தில் ஊர் திருவிழா மற்றும் அரசு விழாக்கள் என அடிக்கடி இந்த பொய்க்கால் குதிரை நடனம் ஆடப்படும். ஆனால், இத்தலைமுறை இளைஞர்கள் இதனை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல புகழும், பெயரும், பெருமையும் இருந்தது. ஆனால், போகப் போக அதெல்லாம் குறைந்து போய்விட்டது.

 

 

நான் சுமார் 40 ஆண்டுகளாக இத்தொழிலில் இருக்கிறேன். நாளாக ஆக, இது மேலும் மழுங்கிக் கொண்டே வருகிறதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை" என்று கூறுகிறார்.

 

 

தன் மாமனாரிடம் இருந்து இக்கலையை கற்றுக் கொண்டதாக கூறும் காமாட்சி உள்ளூர், மற்றும் வெளியூர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

 

 

பெண்களால் சொல்ல முடியாத, சொல்லப்படாத விடயங்களின் கலை வடிவம் "முதலில் கரகம், குத்தி ஆடிக் கொண்டிருந்தேன். தற்போது குதிரை ஆடுகிறேன். அந்தக்காலத்தில் எல்லாம் மார்வாரி குடும்பத் திருமண நிகழ்ச்சிகள், கலெக்டர் வருகை போன்ற பல்வேறு நிகழ்வுகளில் ஆடிக் கொண்டிருந்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது"

 

 

40 ஆண்டுகளாக, அதாவது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதிலிருந்து நான் ஆடுகிறேன். இப்போதெல்லாம் வயதான பெண் கலைஞர்களை எல்லாம் யாரும் அழைப்பதில்லை. இளம் பெண்களைதான் விரும்புகிறார்கள். இப்பவும் நான் கரகம் ஆடுவேன், ஆனால், என்னை யார் விரும்புவார்கள்?" என்கிறார் காமாட்சி. அதுவும் தற்போது பெரும்பாலானோர் சினிமாதான் பார்க்கிறார்களே தவிர, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு யாரும் வருவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

 

 

"தமிழக அரசும் மத்திய அரசும் இக்கலைக்கு ஊக்கமளித்து, எங்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அதுமட்டும் பத்தாது. எங்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்பட வேண்டும். எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், எங்களை அதற்கெல்லாம் பயன்படுத்துவதில்லை. வரப்போகும் புதிய பிரதமருக்கு எங்கள் கோரிக்கை இதுதான்" என்கின்றனர் இக்கலை தம்பதியினர்.

 

 

ஏதேதோ நடனத்துக்கெல்லாம் முக்கியத்துவம் தருகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. ஆனால், இந்த புராதாணக் கலையை செய்யும் நாங்கள் அழிந்து போய்விட்டால், இதனை நாளைக்கு எடுத்து செய்ய ஆளில்லை. அரசாங்கம் இந்த கலைக்கு முக்கியத்துவம் அளித்து வாய்ப்புத் தந்தால் இது வளரும் வாய்ப்பிருக்கிறது" என்று நாடிராவ் கூறுகிறார்.

 


ராஜா ரவி வர்மாவின் லஷ்மி ஓவியத்தில் உள்ள முகம் யாருடையது? ராஜா, ராணிகளை பார்த்திருக்கிறீர்களா?

 

 

"நாம் யாராவது ராஜாக்களையோ ராணிகளையோ நேரில் பார்த்திருக்கிறோமா? யாரும் பார்த்ததில்லை. நாங்கள் கோவில் திருவிழாக்களிலும், பல்வேறு இடங்களிலும் ஆடும்போதுதான், ஓ! ராஜானா இப்படிதான் இருப்பாரோ, ராணினா இப்படித்தான் இருப்பாரோ என்று பாமர மக்களுக்கு, அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

 

 

இந்தக்கலைக்கு நல்ல வரவேற்பு முன்பு இருந்தது.  ஆனால், இப்போது போதுமான வரவேற்பு இல்லை என்கிறார் நாடிராவ். இதனால், போதுமான வாய்ப்புகளும், வருமானங்களும் இல்லை என்கின்றனர் நாடிராவ் - காமாட்சி தம்பதியினர்.


 

இத்தம்பதியின் மகனான சிவாஜி ராவும் இதே தொழிலில்தான் இருக்கிறார். இவர்கள் வரப்போகவுள்ள புதிய அரசுக்கு வைக்கும் மற்றுமொரு கோரிக்கை, "60 வயதுக்கு மேலானவர்களுக்குதான் உதவித் தொகை கிடைக்கிறது. ஆனால், பெண் கலைஞர்கள் 60 வயது வரை இதில் தொடர்வதில்லை. தொடர முடிவதில்லை. எனவே அவர்களுக்கான உதவித் தொகையை 40 அல்லது 45 வயதில் இருந்து கொடுக்க வேண்டும்" என்று கூறுகின்றனர்.

 


இரண்டாவதாக, இக்கலையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களது மற்றொரு ஒரு முக்கியக் கோரிக்கை.

 

 

அதற்காக இக்கலையை பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாக சேர்த்து, விருது பெற்ற கலைஞர்களை வைத்து கற்றுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

 

 

எதிர்காலத்தில் இப்படி ஒரு கலை இருந்ததாக ஏதோ தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளாமல், இவற்றை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் சிவாஜி ராவ்.

 

 

வெளிநாடுகளில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மராத்திய மாநிலத்தை பின்புலமாகக் கொண்ட நாடிராவ் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக தமிழகத்தில் பொய்க்கால் குதிரை நடனத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

"வெளிநாடுகளில் பொய்க்கால் குதிரை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தியராக பிறந்து இக்கலையை செய்வதை நினைத்துப் பெருமைபடுகிறோம். ஆனால், இங்கு கிராமப்புறங்களில் இந்தக்கலையை செய்யும்போது, ஏன் இந்தத் தொழிலை கற்றுக் கொண்டோம் என்று மனது நினைக்கிறது. இதற்கு காரணம் நம் நாகரீகம் மாறிக் கொண்டு வருகிறது என்பதுதான்" என்று சிவாஜி ராவ் தெரிவித்தார்.

 

 

"ஆனால், கிராமங்கள் இருக்கும் வரை இந்தக்கலை அழியாது, அழிய விடமாட்டோம்" என்கிறார் அவர்.

 

 

நன்றி BBC தமிழ் பிரிவு.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 


ஆக்கம் & இடுகை

த. அழகேசன்,

தமிழ்ப் பணிமன்ற உறுப்பினர்,

தி.ஆ 2050- 07- விடை-

(21-05-2019)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக