என் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் சீரிய தமிழ்ப் பூ !

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூன், 2021

தென்னாப்பிரிக்க மண்ணில் விளைந்த முத்து - தில்லையாடி வள்ளியம்மை !


------------------------------------------------------------------------------------------

22-02-1898 முதல் 22-021914 வரை தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி தில்லையாடி வள்ளியம்மை.

 

 

இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.

 

 

தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்.

 

 

நெசவுத் தொழிலாளியான முனுசாமி பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்

 

 

கிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது.

 

 

அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

 

 

மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் தில்லையாடி வள்ளியம்மை.

 

 

அதற்காக 1913ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டபோதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாததால் வெளியே வர மறுத்தார்.

 

 

பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி நீக்கப்பட்ட பின்பே தம் விடுதலையை ஏற்று வெளியே வந்தார் வள்ளியம்மை.

 

 

பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை

த. அழகேசன்

தமிழ்ப் பணிமன்ற உறுப்பினர்

[தி.ஆ 2052, ஆடவை (ஆனி) 15 ]

(22-02-2019)

----------------------------------------------------------------------------------------

 



 

திங்கள், 28 ஜூன், 2021

தாய்ப்பாலில் எரிந்த தஞ்சைப் பெரிய கோயில் விளக்கு !

-----------------------------------------------------------------------------------------

சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர் !

 

மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார்.


சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன் !

 

அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்என்றார் !

 

திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார் !

 

அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் திரு விளக்குகள் எரிய நெய் தந்தால் மட்டும் போதும். மொத்த வருமானமும் அவர் களுக்கே. அதாவது ஏழையின் அடுப்பும், ஆலயத்தின் திருவிளக்கும் ஒரே திரியில் எரியும். இந்த ஆலயத்தோடு அடித்தட்டு மக்களுக்கு உறவு மேம்படும். இதுதான் என் திட்டம், சரியா?’ என்றார் !

 

மிகச்சரியானது மன்னாஎன்று வணங்கினார் !

 

அரசன் ஆணை பிறப்பித்தான். சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கால்நடைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். எந்த நிலை யிலும் நிபந்தனை வழங்காது கட்டுப்பாடு வகுத்து கண்காணியுங்கள் என்றான் !


ஒருநாள் கோவில்களைச் சுற்றி வரும் பொழுது ஒரு கோவிலில் மட்டும் விளக்கு எரியவில்லை. காரணம் கேட்டறிந்தார் !

 

எவத்தூர் மாராயன் என்பவனுக்கு 42 பசு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவனுடைய கட்டுப்பாட்டில் எரியவேண்டிய விளக்கு கடந்த ஏழு நாட்களாக எரியவில்லை என்பதை அறிந்தார் !

 

எவனவன், இறைவன் கட்டளையை நிறைவேற்ற மறுப்பவன். பூட்டுங்கள் தேரை, ஓட்டுங்கள் எவத்தூருக்குஎன்றான் !

 

காலி மனையால் சூழப்பட்ட ஒரு குடிசையின் முன் மன்னரின் தேர் நின்றது. பேரரசன் வந்திருக்கிறேன், மாராயா வெளியே வாஎன்று குரல் கொடுத்தார் !

 

உள்ளே ஒரு பெண்ணின் விசும்பலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது !


சற்று நேரத்தில் கதவைத் திறந்து கசங்கிய சேலையும், கலைந்த கூந்தலும், கலங்கிய கண்களுமாய் பெண்ணொருத்தி வெளியே வந்தாள். அவளது இடுப்பில் நாராய் தொங்கிக் கொண்டிருந்தது, சவலை பாய்ந்த குழந்தை ஒன்று. பேரரசரைக் கண்டதும் அஞ்சி நடுங்கி கீழே விழுந்தாள் !

 

எழுந்திரு பெண்ணே! நீ யார்?’

 

நாந்தாங்க மாராயன் பொஞ்சாதி


உன் கணவன் எங்கே?’


என் புரு‌ஷனும், ராசா கொடுத்த மாடுகளும் போன மாசம் காவிரி வெள்ளத்தில் ஆத்தோடு போயிருச்சி...’ !

 

அவள் சொல்வது மெய்யா என்பது போல திரும்பிப்பார்த்தார். ஆம்! என்று வருத்தத்தோடு தலை அசைத்தனர் பொதுமக்கள் !

 

உனக்காக வருந்துகிறேன். ஆனால் ஒரு கேள்வி. கடந்த மாதம் இறந்தார் என்கிறாய். ஏழு நாட்களுக்கு முன்பு வரை திருவிளக்கு எரிந்திருக்கிறது. கணவனும், மாடுகளும் இறந்தபின் இருபத்து மூன்று நாட்கள் எப்படி நீ விளக்கு எரித்தாய்?’.

 

அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இடுப்பில் நழுவிய குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு, ‘அதை மட்டும் கேட்காதீர்கள் மன்னாஎன்று கண்கலங்கினாள் !

 

பெண்ணே ! அஞ்சாதே உண்மையைச் சொல்’ !

 

சொல்கிறேன் மன்னா! புரு‌ஷன் செத்துப் போயிட்டாலும் ராசாவுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது பாருங்க அதனால என் தாய்ப்பாலை விற்று மூணு ஆளாக்கு நெய் வாங்கி தீபத்தை எரிய வச்சேன். ஒரு வாரமாய் தாய்ப்பால் வத்திப்போச்சு, திரு விளக்கு அத்துப்போச்சு. எங்களை மன்னிச்சிருங்க மகராசாஎன்று குழந்தையோடு தேரின் காலடியில் விழுந்தாள் !

 

நடந்ததை அறிந்த பெருமூச்சுவிட்ட மன்னன் ராஜராஜன் துடிதுடித்துப்போனான் .கண்கள் கலங்கியது தேகம் சிலிர்த்தது !


தேரைவிட்டு கீழிறங்கி தாயையும் குழந்தையையும் சேர்த்தெடுத்து உன்னைப் போன்றவர்களால் தான் பெருமை அடைகிறது என் சோழப்பேரரசு. இன்று முதல் இந்தத்தாயை திருமஞ்சனப் பணிப்பெண்ணாக நியமிக்கின்றேன் அரண்மனை சிற்பியை அழைத்து தாய்ப்பாலால் விளக்கெரித்த இவள் பெயரை கல் வெட்டில் பொறித்து விடுங்கள்என்றான் !

 

 வரலாறு மறக்கடிக்க பட கூடாது !

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

 

ஆக்கம் & இடுகை


த. அழகேசன்

தமிழ்ப் பணிமன்ற உறுப்பினர்

தி.ஆ 2050-06- ஆடவை.

(21-06-2019)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

 

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

சர்.சி.வி.இராமன்.

 

சர். சந்திரசேகர வெங்கட ராமன்  (நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970) பெரும் புகழ் ட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930 –ஆம் ஆண்டு  இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி, ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார் !

 

இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு  “ இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும் !

 

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்கா என்னும் ஊரில் பிறந்தார். அயல் நாட்டுக்குச் செல்லாமல், இந்தியாவிலேயே தன் படிப்பை நிறைவு செய்த  ஒரு அறிஞருக்கு 1930 - ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும் !

 

சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளிப் படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தார !

 

வெங்கட்ராமன் தன் முதுகலைப் பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்புத் தேர்வில் எல்லாப் படங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார் !

 

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார் !

 

பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார் !இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

 

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார் !

 

அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார் !

 

இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் வெப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது !

 

இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார் !


இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது !

 

இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் நைட் ஹுட்எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.


இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான மேட்யூச்சிபதக்கம் வழங்கப்பட்டது. மைசூர் அரசர் ராஜ்சபாபூசன்பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.

 

பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின்பதக்கம் 1941 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.


1957 ஆம் ஆண்டில் அகில உலக லெனின் பரிசுஅளிக்கப்பட்டது !

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஆக்கம் & இடுகை


த. அழகேசன்

[alagesandanapal@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப்புனல் வலைப்பூ

தி.ஆ 2052: கும்பம் (மாசி) 16)

(28-02-2021)

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - --- - - - - - - - - - - - - -